search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுமின் விமர்சனம்"

    விபி விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி, ரிஷி, பிரேம், அழகம் பெருமாள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் விமர்சனம். #Ezhumin #EzhuminReview
    விவேக் - தேவயானி இருவரும் வசதியான தம்பதி. தங்கள் மகனை குத்துச்சண்டை வீரராக வளர்க்கிறார்கள். விவேக் மகனின் நண்பர்கள் திறமைசாலிகளாகவும் அதே நேரத்தில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் இல்லாததால் அகாடமியில் சேரமுடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

    விவேக்கின் மகன் மாநில அளவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் சாம்பியன் ஆகிறான். ஆனாலும் அவர்களால் மகனின் நண்பர்களை நினைத்து அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாத அளவுக்கு சோகத்தில் இருக்கிறார்கள். 

    மகனின் விருப்பப்படியே நடுத்தர குடும்பத்து மாணவர்களின் விளையாட்டு கனவை நிஜமாக்க அகாடமி ஒன்றை தொடங்குகிறார் விவேக். விளையாட்டு துறையில் இருக்கும் அரசியல் காரணமாக பல அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவற்றை இளம் வீரர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. 



    இளம் வீரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் பிரவீன், வினீத், ஸ்ரீஜித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா ஆகியோர்தான் படத்தின் கதாநாயகர்கள். கதாபாத்திரத்தை உணர்ந்து தங்களால் முடிந்தளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார்கள். 

    விவேக் வழக்கமான காமெடியனாக இல்லாமல் மகனின் கனவை நிறைவேற்ற விரும்பும் தந்தையாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி இருக்கும் தேவயானி மனதில் நிற்கிறார்.



    அழகம்பெருமாள் காலம்காலமாக இருக்கும் விளையாட்டு அரசியலின் உதாரணமாக வருகிறார். அட்டு படத்தில் கதாநாயகனாக நடித்த ரிஷி, இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். 

    தமிழ் சினிமாவில் அபூர்வமாக தான் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக எடுக்கப்படும் ஊக்கம் தரும் படங்கள் வெளியாகும். அந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து ஒரு படம் கொடுத்ததற்காக இயக்குனர் விபி.விஜிக்கு பெரிய பாராட்டுகள். சிறுவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். விளையாட்டு துறையிலும் இருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தற்காப்பு கலையின் அவசியத்தையும் கூறியிருக்கிறார்.



    கணேஷ் சந்திரசேகரனின் இசையும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிராக்கிள் மைக்கேல் ராஜின் சண்டைக்காட்சிகள் பெரிய ஹீரோக்களின் படங்களை பார்ப்பது போல இருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராமின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘எழுமின்’ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பார்க்கவேண்டிய படம்.
    ×